முல்லைக் கொடிகள் சூழ்ந்திருந்ததால் 'திருமுல்லைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருமுல்லைவாயில் கோயில் 'வடதிருமுல்லைவாயில்' என்று அழைக்கப்படும். சோழ அரசன் ஒருவன் இவ்வழியாக வந்தபோது குதிரையின் குளம்பு இடறியது. அரசன் கீழே இறங்கி பார்த்தபோது இரத்தம் வர, முல்லைக் கொடியை விளக்கி பார்க்க சிவலிங்கம் தென்பட்டது. அரசன் திகைத்து நிற்க, இங்கு ஓர் ஆலயம் எழுப்பும்படி அசரீரி கேட்டது. மன்னனும் அவ்வாறே செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. குதிரை குளம்பின் அடையாளம் இன்றும் மூலவர் மீது உள்ளது.
மூலவர் 'முல்லைவனநாதர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'கோதையம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். சுவாமியும், அம்பாளும் ஒரே (கிழக்கு) திசையை நோக்கி தரிசனம் தருகின்றனர்.
அம்பிகை பஞ்சாட்சர மந்திரம் உபதேசம் பெற்ற தலம்.
இந்திரன், கார்க்கோடகன், சுதர்மன் ஆகியோர் வழிபட்ட தலம். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி மிக அழகாக காட்சி தருகின்றார்.
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலம். அருகில் உள்ள கடலில் குளித்து, பின்னர் கோயில் குளத்தில் குளித்து, மூன்றாவதாக கோயிலில் உள்ள கிணற்றில் குளித்து பூஜை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : ஆத்மநாத குருக்கள் - 9843048780.
|